மெட்டா, மைக்ரோசாஃப்ட் போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்கு மாறிவரும் நிலையில், மனித ஊழியர்களைவிட AI அதிக செலவுமிக்கது என என்விடியா நிறுவன அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார்.இந்த ஆண்டின் தொடக்கத்தில், மெட்டா நிறுவனம் தனது பணியாளர்களில் 10% (சுமார் 8,000 பேர்) பணிநீக்கம் செய்யவும், காலியாக உள்ள 6,000 பணியிடங்களுக்கான ஆள்சேர்ப்பு திட்டங்களைக் கைவிடவும் முடிவு செய்ததாக அறிவித்தது. நிறுவனத்தை இன்னும் திறமையாக நிர்வகிப்பதற்கும், பிற முதலீடுகளுக்கான செலவுகளை ஈடுசெய்வதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மெட்டா தெரிவித்தது. இதேபோல், மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு விருப்பத்தின் அடிப்படையில் பணியிலிருந்து விலகும் திட்டத்தை அறிவித்தது.பணியாளர் குறைப்பு மூலம் AI தொழில்நுட்பத்தை விரிவாக்கும் முயற்சிகள் பல நிறுவனங்களில் நடைபெற்றுவந்தாலும், கணினிச் செயல்பாட்டிற்கான செலவு ஊழியர்களுக்கான செலவைவிட மிக அதிகம். என்விடியா நிறுவன அதிகாரி Bryan Catanzaro, "செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் நிறுவனங்களுக்குப் பணியாளர் செலவைக் குறைப்பதில்லை; மாறாக, தற்போது பணியில் உள்ள மனிதர்களைக் காட்டிலும் இதற்கான செலவுதான் அதிகமாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.இந்தக் கூற்றை மற்ற தரவுகளும் உறுதிப்படுத்துகின்றன. MIT ஆய்வு ஒன்றின்படி, வெறும் 23% வேலைகளில் மட்டுமே AI செலவு குறைந்ததாக உள்ளது. மீதமுள்ள 77% வேலைகளுக்கு, மனிதர்களே இன்னும் மலிவான தேர்வாக உள்ளனர்.இருப்பினும், பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் வேகத்தைக் குறைக்கவில்லை. 2026-ல் செயற்கை நுண்ணறிவில் சுமார் $740 பில்லியன் முதலீடு செய்யப்படவுள்ளது. செலவுகள் அதிகரித்து வந்தாலும், முதலீடுகள் எல்லாத் துறைகளிலும் வேகமெடுத்து வருகின்றன. அதேநேரத்தில், இந்த ஆண்டு மட்டும் 92,000-க்கும் மேற்பட்ட தொழில்நுட்பப் பணியாளர்கள் ஏற்கெனவே பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இன்று செயற்கை நுண்ணறிவு மலிவானது அல்ல என்றாலும், எதிர்காலத்தில் அது தடுத்து நிறுத்த முடியாததாக மாறக்கூடும் என்று கூறப்படுகிறது.
0விருப்பங்கள்
1விருப்பமின்மைகள்






