சென்னையில் உள்ள ஐஐடி மெட்ராஸ் (IIT Madras)-இன் சுதா கோபாலகிருஷ்ணன் மூளை ஆராய்ச்சி மையம் (SGBC), ANCHOR (Atlas of Neurochemical Characterisation of the Human Brainstem with 3D Reconstruction) என்ற உலகின் மிகத் துல்லியமான 3D மனித மூளைத் தண்டு (Brainstem) வரைபடத்தை உருவாக்கியுள்ளது. இந்த வரைபடம், MRI ஸ்கேன் முதல் ஒற்றை நரம்பு செல்கள் (Neurons) வரை தொடர்ச்சியாக ஆய்வு செய்யும் வசதியை வழங்குகிறது.
இந்த ஆய்வுக்காக கருவில் உள்ள சிசு, குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் ஆகியோரின் மூளைகளில் இருந்து பெறப்பட்ட 500-க்கும் மேற்பட்ட திசு மாதிரிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. உயிருக்கு அத்தியாவசியமான சுவாசம், இதயத் துடிப்பு, தூக்கம், விழிப்பு நிலை மற்றும் உடல் இயக்கங்களை கட்டுப்படுத்தும் Brainstem பகுதியை இதுவரை இல்லாத அளவுக்கு துல்லியமாக இந்த அட்லஸ் பதிவு செய்துள்ளது.
200-க்கும் மேற்பட்ட நரம்பு செல் குழுக்கள் மற்றும் நரம்புப் பாதைகள் இதில் அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும் 8 வேதியியல் குறியீடுகள் (Chemical Markers) மூலம் பல்வேறு நரம்பு செல்களின் தன்மைகளும் தெளிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
விலை உயர்ந்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தாமல், உயர் தெளிவுத்திறன் கொண்ட நுண்ணோக்கி படங்கள் மூலம் இந்த அட்லஸ் உருவாக்கப்பட்டிருப்பது இதன் முக்கிய சிறப்பாகும்.
இந்த அட்லஸ் நேரடியாக நோயைக் கண்டறியும் கருவி அல்ல. ஆனால் அல்சைமர், பார்கின்சன், பக்கவாதம் (Stroke), ஆட்டிசம், திடீர் குழந்தை மரணம் (SIDS), கோவிட்-19 காரணமான நீண்டகால நரம்பியல் பாதிப்புகள் போன்ற நோய்களை ஆழமாகப் புரிந்துகொள்ளவும், மூளை அறுவை சிகிச்சைகளை மேலும் துல்லியமாக மேற்கொள்ளவும் இது பெரிதும் உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
இந்த திட்டத்தில் 20 விஞ்ஞானிகள் 18 மாதங்கள் பணியாற்றியுள்ளனர். தற்போது SGBC-யில் 200-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள், பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். மேலும் இந்த ANCHOR அட்லஸ் உலகம் முழுவதும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் இலவசமாக பயன்படுத்தும் வகையில் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அடுத்த கட்டமாக, 100-க்கும் மேற்பட்ட மனித மூளைகளை பல்வேறு வயது நிலைகளிலும், அல்சைமர் மற்றும் டிமென்ஷியா உள்ளிட்ட நரம்பியல் நோய்களுடனும் ஆய்வு செய்து, மனித மூளையில் நோய்கள் ஏற்படுத்தும் மாற்றங்களை செல் அளவிலேயே புரிந்துகொள்ளும் உலகளாவிய குறிப்புக் களஞ்சியத்தை உருவாக்க IIT மெட்ராஸ் திட்டமிட்டுள்ளது.
2விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்






